கட்டடத் தொகுதி நிர்மாணப் பின்னணி

OSA Block Front view

பள்ளிக் கல்வி என்பது ஒவ்வொரு மனிதனிற்கும் வாய்க்கப்பெற்ற வரப்பிரசாதமே. ஒவ்வொருவரது வாழ்க்கையிலும் மிகப் பெரும் தாக்கம் செலுத்தும் பிரதான காரணிகளில் பள்ளிக் கற்றல் என்பது தவிர்க்க முடியாததாகும். ஊட்டல் கல்வியில் இருந்து சுயகற்றல் வரைக்கும் தன்னைத் தான்வாழும் சூழலுக்கும் சமுதாயத்திற்கும் உகந்ததாக தயார்ப்படுத்திக் கொடுக்கும் ஒரு மூலதனச் சந்தையே இப் பள்ளிகள், கல்லூரிகள் ஆகும். மாறிகள், மாறிலிகள் நிறைந்த மனித வாழ்க்கைப் பயணத்தில் மிகச் சிறந்த ஒரு மாறியாகவும் அங்கே பெற்றுக்கொண்டவைகள் அதன் விளைவுகள் காலம் கடந்தும் மாறிலிகளாக திகழ்வதெனின் அது பள்ளிக் கல்வி மாத்திரமே. 

பள்ளிக் கல்வி என்பது நம் அனேகரின் பார்வையில் தென்படுவதுபோல் அன்றி, ஒரு மனிதனின் வாழ்க்கை தொடர்பிலான ஒவ்வொரு சந்தர்ப்பத்திற்கும், பிரச்சினைகளுக்கும் முகங்கொடுக்க தங்களைத் தாங்களே தயார்ப்படுத்தும் தளமாகவே ஆரம்பிக்கின்றது. சமூகப் பிராணியாக தோற்றம் பெறுதல், தொழில் வாய்ப்புக்களைக் கண்டறிதல், உறவுகளை உருவாக்குதலும் பேணுதலும், மற்றும் உலகத்தைப் புரிந்துகொள்ளுதல் முதலிய மனிதப் பிறவியின் எண்ணற்ற அர்த்தங்கள் விளைவிக்கப்படும் ஒரு ஊட்டல் நாற்று மேடையே பள்ளிகள், கல்லூரிகள் ஆகும்.

இவ் ஊட்டல் தொழிற்ப்பாடுகளில் கணிசமான பகுதியை பௌதீக வளங்களே வழங்குகின்றன. எமது கல்லூரிக்கு வாய்க்கப்பெற்ற பெரும்பாலான பௌதீக வளங்கள் நீங்கள் அனைவரும் அறிந்ததற்கமைவாகவும், உணர்ந்ததற்கமைவாகவும், உண்மையாகவும் கடந்த நூற்றாண்டுக்கு உரியவைகளே. இவைகளில் பொருத்தமான தெரிவுகளின் ஊடாக நகர்ந்து இன்றைய காலச்சூழலுக்கு மிகவும் அவசியமானதொரு கட்டுமானத்தை நல்கவேண்டியது எமது அனைவரதும் தலையாய கடமையாகும். இந்தச் சூழலிலேயே நாளை நாமும் எமது தலைமுறைகளும் வாழப்போகின்றோம். நிகழ்காலம் சிறப்புடன் இருந்தால் எதிர்காலத்தினைப்பற்றி கவலைகொள்ளத் தேவை இல்லை. நிகழ்காலத்தில் எம்மை எமது சமூகத்திற்காக தயார்ப்படுத்தவேண்டிய அத்தியாவசியம் தவிர்க்கமுடியாதது.

 

 

எமது கல்லூரிக்கு 46 வகுப்பறைகளைக் கொண்ட 05 அடுக்குகளைக் கொண்ட கட்டடத் தொகுதி ஒன்று உருவாக்க பூர்வாங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. தற்சமையம் காணப்படும் வகுப்பறைக் கட்டடங்கள் உரிய தர நியமங்களுக்கும், சுற்றாடலுக்கு நேயம் மிக்கதாகவும் உரிய காற்றோட்ட வெளிச்ச வசதிகள் உடையனவாகவும் இல்லை என்பது மனம் வருந்தத் தக்கது. கவனக் கலைப்பான்கள் நிறைந்த தன்மைகளைத் தன்னகத்தே கொண்டது. நிர்வாக செயற்பாடுகளை செவ்வனவே மேற்கொள்வதற்கு பரந்து விரிந்த பரப்புக்களில் காணப்படும் வகுப்பறைகள் கண்காணிப்பதற்கும் கவனத்தை செலுத்துவதற்கும் சற்றே சிரமம் மிகுந்தவை. 40 நிமிட பாடவேளைகளில் சில நிமிடங்கள் வகுப்பு மாறுதலுக்காக மாத்திரமே ஒதுக்கவேண்டிய துர்பாக்கிய நிலை தொடர்கின்றது.

மாறிவரும் உலக ஒழுங்கில் முரணற்ற முகாமைத்துவத்திற்கும், வினைத்திறன் மிக்க வளப்பாவனைக்கும் விரயமற்ற காலசட்டகமும் நமது அடைவை முன்னோக்கி நகர்த்துவதற்கு முக்கிய கருவிகளாக தவிர்க்க முடியாது நிலைத்துள்ளது. கடந்த நூற்றாண்டுக்குரிய பௌதீக வளங்கள், இந்த நூற்றாண்டுக்குரிய மனித வளங்கள் அடுத்த நூற்றாண்டுக்காக தயார்ப்படுத்தப்படவேண்டிய எதிர்கால சந்ததி என்பன இன்று எங்கள் கைகளில். அவ்விடயங்களை கையாள்வதற்கு திறன் கற்றலறை வசதிகள் செயற்கை நுண்ணறிவுக் கண்காணிப்புக்களும் வழிநடத்தல்களும் மிகச் சிறந்த பெறுபேற்றையும் எமது நோக்கத்தை தொடுவதற்கும் இன்றியமையாதவைகள் ஆகும். 

இக் கட்டடத்தொகுதியானது அமைக்கத்திட்டமிடப்படும் இக்காலப்பகுதியானது மிகவும் சிறந்ததொரு காலப்பகுதியாகும். காரணம் தற்போது காணப்படும் பௌதீக வளங்கள் அனைத்தும் மீளுருவாக்கத்திற்கு உட்படுத்தவேண்டிய நிலையில் ஓய்வை நோக்கி சென்றுகொண்டிருக்கின்றன. இன்றைய தேவைக்கு அமைய அனைத்தையும் உருவாக்கக்கூடிய சந்தர்ப்பம் உருவாகியுள்ளது. 

நூற்றாண்டு கடந்த வரலாற்றையும், உலகம் முழுவதும் வியாபித்துள்ள பலமான பழைய மாணவர்களையும் வேராகவும் விழுதாகவும் கொண்ட எமது கல்லூரித்தாய்க்கு இவ்வாறானதொரு செயற்றிட்டத்தினை நிறைவேற்றிக்கொள்வது என்பது எம்மால் ஒரு கல்லூரியே அமைக்கப்பட்டது என்ற முழு ஆத்ம திருப்திக்கும் உரியதொரு வாழ்க்கையின் அருமையானதொரு சந்தர்ப்பம் ஆகும்