எமது சங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு செயற்திட்டங்களின் கையளிப்பு மற்றும் 46 வகுப்பறைக் கட்டட தொகுதி அங்குராற்பணம் என்பன 30.04.2022 அன்று கல்லூரியில் நடைபெற்றது.
யா/சாவகச்சேரி இந்துக் கல்லூரியின் நவீனசிற்பி பூலோகசிங்கம் வெற்றிவேலு அவர்களின் நூறாவது பிறந்ததினத்தை நினைவுகூரும் வகையில் 30.04.2022 அன்று கல்லூரியில் நிகழ்வினை நடாத்துவதற்கு கல்லூரிச் சமூகம் தீர்மானித்திருந்தது. அந்தவகையில் ஒழுங்கமைக்கப்பட்ட நிகழ்வானது, கல்லூரியின் அதிபர் திரு ந. சர்வேஸ்வரன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
கல்லூரியின் பிரதான மண்டபத்தினை சூழ அழகாக்கும் வேலைத்திட்டத்தின் முதற்படியாக எமது கல்லூரியின் முன்னாள் ஆசிரியர் அமரர் பரமேஸ்வரி அழகரட்ணம் அவர்களின் நினைவாக அவரது மகள் திருமதி புஸ்பலதா சதானந்தன் அவர்களால் அமைக்கப்பட்ட “பரமேஸ்வரி அழகரட்ணம் நினைவு முற்றம்” அவரால் திறந்து வைக்கப்பட்டது.
தொடர்ந்து பிரான்ஸ் பழைய மாணவர் ஆசிரியர் சங்கத்தின் நிதிப்பங்களிப்புடன் விஸ்தரிப்பு பூர்த்தியாக்கப்பட்ட அருணாசலம் மண்டபம் பேராசிரியர் திரு கந்தசாமி அவர்களாலும் நினைவுக்கல் பிரான்ஸ் பழைய மாணவர் ஆசிரியர் சங்கத்தின் தலைவர் சி.ஶ்ரீசுவேந்திரா அவர்களினாலும் திறந்து வைக்கப்பட்டது.
வெற்றிவேலு நூற்றாண்டு நிகழ்வின் அடுத்த நிகழ்வாக கல்லூரியின் தடம் சஞ்சிகை அதிபர் வெற்றிவேலு அவர்களின் நினைவுடனும், நினைவு நூற்றாணடை மையப்படுத்தியும் வெளியிடப்பட்டு கல்லூரியின் 83-84 ம் வருட மாணவர்களிடம் கையளிக்கப்பட்டது.
நோர்வே பழைய மாணவர் ஆசிரியர் சங்கத்தினரால் தயாரிக்கப்பட்ட கல்லூரியின் புகழ் பா எமது முன்னாள் பிரதி அதிபர்களால் வெளியிட்டு வைக்கப்பட்டது. இதற்கான வரிகளை செல்வா செல்வரமணனும், இசையை இந்தியாவைச் சேர்ந்த சிந்தன் ஜெயமூர்த்தி வழங்கியிருந்தார். இவ்விழாவில் நோர்வே பழைய மாணவர் ஆசிரியர் சங்கத்தின் சார்பாக திரு.ப.சுதர்சன் அவர்கள் கலந்து சிறப்பித்திருந்தார்.
இவ் நூற்றாண்டின் மிக முக்கிய செயற்றிட்டமான பழைய மாணவர் சங்கத்தின் 46 வகுப்பறை கட்டடத் தொகுதிக்கான அங்குராற்பண நிகழ்வானது நடைபெற்றது. இவ் நிகழ்வானது புலம்பெயர் சங்க நிர்வாகத்தினரும் எமது தாய் சங்க நிர்வாக உறுப்பினர்களும் இணைந்து திட்டத்தினை ஆரம்பித்து வைத்தார்கள்
தொடர்ந்து கல்லூரியின் நிறுவுனர் திரு வி.தாமோதரன் அவர்களின் திருவுருவச்சிலையானது பிரதான மண்டப முன்றலில் நிறுவப்பட்டது. இதற்கான நிதிப்பங்களிப்பினை முன்னாள் அதிபர் பூ வெற்றிவேலு அவர்களின் குடும்பத்தினர் வழங்கியிருந்தனர். அதனை கல்லூரியின் ஓய்வு நிலை அதிபர்களான திரு இ. கைலைநாதன், திரு அ.கயிலாயபிள்ளை ஆகியோரால் இணைந்து திறந்துவைக்கப்பட்டது.
கல்லூரியின் நவீன சிற்பி அமரர் பூ.வெற்றிவேலு அவர்களின் திருவுருவச் சிலையானது கல்லூரிச் சமூகத்தின் நிதிப்பங்களிப்புடன் அமைக்கப்பட்டு வெற்றிவேலு அவர்களின் குடும்பத்தினருடன் இணைந்து கல்லூரியின் பழைய மாணவனும் மக்கள் மருத்துவருமான மருத்துவர் சு சி அருளானந்தம் அவர்களால் திரைநீக்கம் செய்துவைக்கப்பட்டது.
இவ் இரு திருவுருவ சிலைகளையும், மிகவும் சிறப்பாகவும் நேர்த்தியாகவும் கல்லூரியின் ஆசிரியரான செல்வா செல்வரமனன், மற்றும் கபேசன் கிருபா ஆகியோர் அமைத்திருந்தனர்.
இவ் நிகழ்வானது கலை நிகழ்வுகள், விருந்தினர் உரைகளுடன் சிறப்புற நடைபெற்று ஆக்கமும் ஊக்கமும் தந்த அனைவருக்கும் நன்றி கூறி, மதிய போசனத்துடன் இனிதே நிறைவு பெற்றது
“கல்லூரி அன்னைக்காய் கரம் கோர்ப்போம் உறுதியுடன்”
மேலதிக படங்களுக்கு புகைப்படங்கள் – CHCOSA